கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் என்னென்ன?
பழ பேஷியல்: முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும்.
நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.
காய்கறி பேஷியல்: முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும்.
இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.
மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.
பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.
குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்.
அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும்.
மசாஜுக்கு பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம். வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.