Pages

Tuesday, March 15, 2016

வேதனை தரும் வேர்க்குரு


உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதை வழியாக நம் உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள், ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்து விடுகின்றன. அவற்றின் கழிவுகள், தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அவை, வியர்வை துவாரங்களை அடைத்து, கட்டிகளை உருவாக்குகின்றன. 


அதுமட்டுமின்றி, தோலின் வழியாக உட்செல்ல முற்படும் நுண் கிருமிகள், ரத்தத்தின் உள் செல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு, தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்த கட்டிகள், நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து உடைந்து சீழாக வெளியேறி, நச்சுநீர்கள் பட்ட இடங்களில் புண்ணாக மாறி, பின் ஆறி விடுகின்றன. இந்த கட்டிகள், வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் எனப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், தோலை சுத்தமாக வைக்காததால், தோலுக்கடியில் பலவிதமான அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேருவதால், தோல் கடினமாகி, அதிலுள்ள செல்கள் பாதிப்படைந்து, பாதிக்கப்பட்ட செல்களிலுள்ள நுண் கிருமிகள் வெளியேற முடியாமல், தோல் மற்றும் தோலின் வெளிப்புற பகுதிகளில் கட்டிகளை உண்டாக்குகின்றன. இதுபோன்ற கட்டிகள், லேசான வீக்கமாக வந்து, பின் கட்டியாக மாறும். 
இக்கட்டிகள் வந்தால், நெரி கட்டுதல், நமைச்சல் போன்ற பல தொல்லைகளை ஏற்படுத்தும். வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் வராமல் இருக்க, கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க, இளநீர், மோர், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரம் மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். திட உணவுகளை குறைத்து, திரவ உணவுகள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.

No comments: