Pages

Saturday, March 19, 2016

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்


tomato க்கான பட முடிவு
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட்  புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு  வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ  தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய்  ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.


உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப்படுகிறது. பிரிட்டனில்  மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய்  காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள்  மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும்  குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு  செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில்  பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500  கிராம் தக்காளியை உணவில் சோத்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம்  வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர். 

அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும்,  பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும்  இவர்கள் கண்டறிந்தனர். புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு  கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வனசாஏர், அதே சமயம்,  இதை உறுதி செய்ய வேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித  செல்களில் மரபணு  மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க  வல்லது. அதன் மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமாக கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக  உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து  தயாரிக்கப்படும் ரொட்டி , பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து  தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும்  கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட்  புற்றுநோயைத் தடுக்க வல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து  தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட்  புற்றநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுபடுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

No comments: