Pages

Wednesday, May 6, 2015

பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்


 பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்

தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது.

தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம். பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.  


முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும்.

நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.

ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள். 

பலன்கள் :

பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.

No comments: