Pages

Wednesday, November 26, 2014

கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை
சாதாரண கூந்தலுக்கு...
இந்த வகைக் கூந்தலுக்கு அதிக மெனக்கெடல் தேவையிருக்காது. தினசரி கவனிப்பே போதுமானது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தலா 2 டீஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பாக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் பால் விடவும். உடனே திரிந்த மாதிரி வரும். இந்தக் கலவையை மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில் படும்படி தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். தண்ணீரில் 10 மருதாணி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் சுத்தமான டவலை நனைத்துப் பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும். மருதாணி இலை, கூந்தலை கண்டிஷன் செய்யும். நான்கைந்து முறை இப்படி டவல் கட்டி எடுத்து, பிறகு வழக்கமாக உபயோகிக்கிற ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து கூந்தலை அலசவும். முதல் நாள் இரவே 1 கைப்பிடி அளவு சீயக்காய், 2 பூந்திக் கொட்டை, 1 டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் சிறிது தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் தலையை அலச ஷாம்பு மாதிரிப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசையான கூந்தலுக்கு...
நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா ஆயில்) 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன், பாதாம் ஆயில் 1 டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி மிதமான மசாஜ் கொடுக்கவும். 2 டேபிள்ஸ்பூன் மருதாணி விழுது, 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை டீஸ்பூன் துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் பேக் மாதிரிப் போட்டு, அதே விழுதை முடிக் கற்றைகளில் படும்படி நுனி வரை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து அலசலாம்.

வறண்ட கூந்தலுக்கு...

 பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், ஹென்னா ஆயில் (மருதாணி எண்ணெய்) 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடாக்கவும். வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் உறிஞ்சிக் கொள்ளும். சிறிது எண்ணெயை முடிக் கற்றைகளிலும் நுனி வரை தடவி, பின்னல் போட்டு, ஒரு ரிப்பன் வைத்து மடித்துக் கட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கூந்தலைப் பிரித்து, அதே எண்ணெய் கலவையை மறுபடி விரல்களால் தொட்டு, கோதிவிட்டு, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவல் கட்டி, ஸ்டீம் கொடுக்கவும்.  சிறிது வேப்பிலை, 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு பேக் போட்டு, ஊற வைத்துக் குளிக்கவும். விருப்பமுள்ளோர் முட்டையின் வெள்ளைக் கருவை இதில் கலந்து கொள்ளலாம்.

No comments: