Pages

Thursday, July 31, 2014

ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம்

ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம் 


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது என, கூறுவதை கேட்டிருப்போம். ஏனென்றால் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம், ஆப்பிளையே மிஞ்சும் என அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  தெரியவந்த தகவல்தான் இது. வெறும் தகவல் மட்டுமல்ல, உறுதி செய்யப்பட்ட விஷயமும்கூட. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற  பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

கோடை காலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில், தோல் வறட்சியை போக்கவும், இழந்த நீர்ச்சத்தை  ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்த பழங்களே நமக்கு பெரிதும்  உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது.
 
அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை தேடி எடுத்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால்தான், பலரும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். நாம் சிறப்பான சத்துக்கள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக்கொள்ளலாம்.நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கருதப்படும் இந்த பழங்கள், தற்போது இந்தியாவில் சிறு நகரங்களில் கூட கிடைப்பதாக உள்ளது. 

இதில் நிறைந்துள்ள சத்துகள் போன்றே விலையும் சற்று அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. கோடைக்காலத்தில் பெருமளவு இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன்  வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல்  அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை பருகி பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படும். இதை தவிர்க்க ஸ்ட்ராபெர்ரி  பழச்சாறை குடித்தால் போதும். இதில், 5 பழங்களில் 250 மி.லி., அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும்  நமக்கு கிடைக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கும் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினாலே போதும். ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது. முகத்தில் உள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச்செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பில் இருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கும் இப்பழத்தை கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல மாற்றம் காணலாம்.

இன்று ஆண், பெண் அனைவருக்கும் பெரிய குறையாக இருப்பது உடலின் நிறம்தான். இதற்கும் ஸ்ட்ராபெர்ரியில் தீர்வு உண்டு. சருமத்துக்கு  இளமையை கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெறலாம். அதிலும், பழ  வகைகளில் அதிக அளவு முகத்தை பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி. சிவப்பு நிறத்தில் ஜொலிக்க  விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 

இந்த சாற்றை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல், 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன், 7 ஸ்பூன் பாலை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில்  குளிப்பதற்கு முன்பு முகத்தில் மாஸ்க் போல போடவும்.

நன்றாக காய்ந்ததும், முகத்தை கழுவவும். இதன் பிறகு எந்த கிரீமும் பூச வேண்டிய  அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூசுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாக பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.  சரும அழுக்கை நீக்கி, முகத்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்யும் மிக எளிதான, பலன் தரக்கூடிய கிளன்சிங் முறை.  

No comments: